பெங்களூருவில் சட்டவிரோதமாக ரெம்டெசிவிர் மருந்து விற்றதாக ஆயுர்வேத டாக்டர் உள்பட 40 பேர் கைது
பெங்களூருவில் சட்டவிரோதமாக ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ததாக கடந்த ஒரு வாரத்தில் ஆயுர்வேத டாக்டர் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த மருந்தை கள்ள சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதும் அதிகரித்து வருகிறது.
பெங்களூருவில் சட்டவிரோதமாக ரெம்டெசிவிர் மருந்தை விற்கும் கும்பலை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி, பெங்களூருவில் அந்த மருந்தை விற்பனை செய்ததாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூருவில் சட்டவிரோதமாக ரெம்டெசிவிர் மருந்தை விற்கும் கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ஒரு வாரத்தில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஆயுர்வேத டாக்டர் ஆவார். பெரும்பாலும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் நர்சுகள், ஊழியர்கள், மருந்து கடைகளை நடத்தி வருபவர்கள் தான் ரெம்டெசிவிர் மருந்தை சட்டவிரோதமாக விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு பாட்டில் மருந்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்துள்ளனர். கைதான 40 பேரிடம் இருந்து இதுவரை 80 பாட்டில் ரெம்டெசிவிர் மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு போடப்படும் இந்த மருந்தை சட்டவிரோதமாக யார் விற்பனை செய்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மருந்து விற்பனை செய்பவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.