தூத்துக்குடியில் மனைவியை உயிருடன் எரித்து கொல்ல முயற்சி கணவன் தப்பி ஓட்டம்
தூத்துக்குடியில், மனைவியை உயிருடன் எரித்து கொல்ல முயன்ற கணவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
தூத்துக்குடி:
மனைவியை உயிருடன் எரித்து கொல்ல முயன்ற கணவர் தப்பி ஓடிவிட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மது பழக்கத்தால் பிரச்சினை
தூத்துக்குடி சுனாமி காலனி கீதாஜீவன்நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவருடைய மகன் ரீகன் (வயது 28). இவருடைய மனைவி சந்திரலேகா (23). ரீகனுக்கு மது குடிப்பழக்கம் இருந்து வந்தது.
இதனால் அவர் மது குடித்து விட்டு, வீட்டு செலவுக்கு சரிவர பணம் கொடுக்காமல் இருந்து வந்தாராம். இதனால் மனமுடைந்த சந்திரலேகா, கணவரை விட்டு பிரிந்து தனது பாட்டியுடன் வசித்து வந்தாராம். இதில் ஆத்திரம் அடைந்த ரீகன், சந்திரலேகாவின் பாட்டி வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு இருந்த சந்திரலேகாவை குடும்பம் நடத்த வருமாறு ரீகன் வற்புறுத்தி உள்ளார். இதற்கு மறுத்த சந்திரலேகாவை அவர் அடித்து உதைத்தாராம்.
எரித்து கொல்ல முயற்சி
பின்னர் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை அவர் மீது ஊற்றி தீவைத்து உயிருடன் எரித்து கொல்ல முயன்றுள்ளார். உடலில் தீப்பற்றிய நிலையில் சந்திரலேகா அலறிய சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததை பார்த்த ரீகன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் சந்திரலேகா மீது எரிந்த தீயை அணைத்துள்ளனர். மேலும் காயம் அடைந்த சந்திரலேகாவை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் ரீகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.