வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு என்னென்ன கொண்டு செல்லலாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விளக்கம்

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு என்னென்ன கொண்டு செல்லலாம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2021-04-30 12:02 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு என்னென்ன கொண்டு செல்லலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விளக்கம் அளித்து உள்ளார்.
வாக்கு எண்ணிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்ட மன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தூத்துக்குடி வ.உ.சி என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள படி இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணியில் இருந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். எனவே பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்கு எண்ணும் அறைக்குள் தேர்தல் பார்வையாளர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள், வாக்கு எண்ணும் உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள், தேர்தல் பணியாற்றும் பொது ஊழியர்கள், சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் மைய முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அனுமதி இல்லை
வாக்கு எண்ணும் அறைக்குள் செல்பேசி, ஐ-பேட், லேப்டாப் அல்லது ஒலி, ஒளி அமைப்பை பதிவு செய்யக்கூடிய எந்த வகையான மின்னணு சாதனங்களையும் கொண்டு செல்ல தேர்தல் பார்வையாளர்கள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை. எனினும் வாக்கு எண்ணும் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள், வாக்குகள் விவரங்களை சாப்ட்வேரில் அப்டேட் செய்வது சம்பந்தமாக கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் செல்போன்கள் பயன்படுத்தப்பட வேண்டிய பட்சத்தில் சம்பந்தபட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனுமதியுடன் அதனை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
தடை செய்யப்பட்ட பொருட்கள்
தடைசெய்யப்பட்ட பொருட்களான தீப்பெட்டி, ஆயுதங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய எந்த வகையான பொருட்களையும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்துக்கு வரும் அனைவரையும் முழுமையாக சோதனை செய்த பின்பே அனுமதிக்கப்படுவார்கள். பெண்களாக இருக்கும் பட்சத்தில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள மறைவான இடத்தில் வைத்து பெண் காவலர்கள் மூலம் சோதனை செய்யப்படுவார்கள்.
பிரையண்ட் நகர் 7-வது தெருவின் வழியாக செல்லும் பிரதான வாயில் வழியாக அரசு அதிகாரிகள், அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள், வாக்கு எண்ணும் மைய முகவர்கள் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதிக்கு உரியவர்கள் பிரையண்ட் நகர் 8-வது தெரு வழியாக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளின் நுழைவு வழியே உள்ளே மற்றும் வெளியே செல்லவும், ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திக்குளம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உரியவர்கள் பிரையண்ட் நகர் 9-வது தெரு வழியாக அமைக்கப்பட்டு தடுப்பு வழியாக உள்ளே மற்றும் வெளியே செல்லவும், கோவில்பட்டி தொகுதிக்கு உரியவர்கள் கணேஷ்நகர் தொடக்கத்தில் உள்ள நுழைவு வழியாக சென்று அங்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வழியாகவும், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் சட்ட மன்ற தொகுதிகளுக்கு உரியவர்கள் கணேஷ்நகர் இறுதியில் உள்ள நுழைவுவாயில் வழியாக சென்று அங்கே அமைக்கப்பட்டு உள்ள தடுப்பு வழியாக உள்ளே மற்றும் வெளியே செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அனுமதி
எனவே, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள வழிகளில் மட்டுமே செல்லமுடியும். அவ்வாறு வருபவர்களின் வாகனங்களை அந்தந்த நுழைவு வாயில் அருகே போலீசார் குறிப்பிடும் இடங்களில் நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் வாக்கு எண்ணும் அறைக்கு பேனா, பேப்பர், எழுதுவதற்கான அட்டை மற்றும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி தலைமை அதிகாரியால் வழங்கப்பட்ட படிவம் நகல் (வாக்குச் சாவடியில் பதிவான மொத்த வாக்குகள் விவரம்) ஆகியவற்றை கொண்டு வர அனுமதி உண்டு.
முகவர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வழங்கப்பட்டு உள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களால் முகவர் என நியமிக்கப்பட்டு வழங்கப்பட்ட கடிதம் ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே, அவர்கள் வாக்கு எண்ணும் இடத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றுடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு வரவேண்டும் அல்லது கொரோனா தடுப்பூசியை இருமுறை செலுத்தி, அதற்கான ஆவணத்துடன் வரவேண்டும். இல்லையெனில் அனுமதிக்கப்படமாட்டார்கள். வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வெற்றிக் கொண்டாட்டங்கள். பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, கார்த்திகேயன், இளங்கோவன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேஷ், பொன்னரசு, பிரகாஷ், பழனிக்குமார், காட்வின் ஜெகதீஷ்குமார், பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், முருகவேல், கண்ணபிரான் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்