தேனி கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் உள்பட 12 பேருக்கு கொரோனா கிருமி நாசினி தெளிப்பு
தேனி கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் உள்பட 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் கலெக்டர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இந்த பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் துணை கலெக்டர், தாசில்தார், தேர்தல் பிரிவு ஊழியர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் அரசு மருத்துவமனையிலும், சிலர் தங்களின் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 12 பேர் பாதிக்கப்பட்ட தகவல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து கிருமி நாசினி தெளிக்கும் எந்திரம் அங்கு வரவழைக்கப்பட்டது. அந்த எந்திரம் மூலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.