சேலம் மாவட்டத்தில் 3 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 340 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 340 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
கொரோனா அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் தினமும் கொரோனாவுக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. கொரோனா நோய் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் வரை 7 லட்சத்து 76 ஆயிரத்து 164 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது.
8,115 பேர் கண்காணிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 90 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள 1,946 வீடுகளில் வசிக்கும் 8,115 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் ஆர்வமாக தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதனால் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகின்றது.
நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 340 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.