வியாபாரிகளுக்கு கொரோனா; மேலப்பாளையம் உழவர் சந்தை மூடப்பட்டது

வியாபாரிகளுக்கு கொரோனா ஏற்பட்டதால் மேலப்பாளையம் உழவர் சந்தை மூடப்பட்டது.

Update: 2021-04-29 19:06 GMT
நெல்லை, ஏப்:
வியாபாரிகளுக்கு கொரோனா ஏற்பட்டதால் நெல்லை மேலப்பாளையம் உழவர் சந்தை மூடப்பட்டது. 

கொரோனா பரவல்

நெல்லை மேலப்பாளையத்தில் மாநகராட்சி மண்டல அலுவலகம் எதிரே உள்ள தெரு பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகள் மற்றும் வியாபாரிகளின் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தற்போது கொரோனா பரவல் 2-வது அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையொட்டி உழவர் சந்தையில் உள்ள வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 பேர் வரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானது தெரியவந்தது.

சந்தை மூடப்பட்டது

இதையடுத்து மேலப்பாளையம் உழவர் சந்தைக்கு நேற்று காலை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் அங்கு வியாபாரத்தை நிறுத்திவிட்டு, உடனடியாக சந்தை நுழைவு வாசல் கேட்டை இழுத்து மூடினர். மேலும் அதன் மீது கொரோனா குறித்து எச்சரிக்கை பேனரும் கட்டி தொங்க விட்டனர்.
இதுதவிர அந்த பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு    ஏற்படுத்தினர். கொரோனா பரவல் ஏற்படாத வகையில் சமூக இடைவெளியை கடைபிடித்து காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் அங்கு பிளீச்சிங் பவுடர் தூவி, கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.
மேலப்பாளையம் கால்நடை சந்தை தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு காரணமாக கடந்த 27-ந்தேதி மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்