வீடுதேடி சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்

சுல்தான்பேட்டை அருகே வீடு தேடி சென்று தலைமை ஆசிரியர் பாடம் நடத்துகிறார். மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து வருகிறார்கள்.

Update: 2021-04-29 18:15 GMT
சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே வீடு தேடி சென்று தலைமை ஆசிரியர் பாடம் நடத்துகிறார். மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து வருகிறார்கள். 

பள்ளிகள் மூடல் 

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 70 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக தற்போது பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. 

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு அந்த வசதி இல்லாததால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. 

பாடம் நடத்தும் ஆசிரியர் 

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி முதல் மாணவர்களுக்கு அறிவு திறனை வளர்க்கும் வகையில் இணைப்பு பயிற்சி பாடத்துக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன. 

அந்த புத்தகங்களை படித்து மாணவர்கள் அறிவுத்திறனை வளர்த்து வருகிறார்கள். இந்த நிலையில செஞ்சேரிபுத்தூர் ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் மகரஜோதி கணேசன், மாணவர்களின் வீடு தேடி சென்று அவர்களை திரட்டி, மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்தி வருகிறார்.

 மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கல்வி கற்று வருகிறார்கள். இது குறித்து தலைமை ஆசிரியர் மகரஜோதி கணேசன் கூறியதாவது:- 

ஆர்வத்துடன் வருகிறார்கள் 

திறனறிவை வளர்த்துக்கொள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகங் கள் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும் என்பது தெரிவது இல்லை. 

எனவே நான் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை அங்குள்ள பொது இடத்தில் சமூக இடைவெளி விட்டு அமர வைத்து பாடம் சொல்லிக்கொடுக்கிறேன். 

இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பாடத்தை ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள். அத்துடன் அவ்வப்போது தேர்வும் வைக்கிறேன். 

மேலும் இந்த புத்தகம் தொடர்பாக மாணவர்களுக்கு கல்வி சேனல் மூலம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. எந்தெந்த நேரத்தில் எந்தெந்த வகுப்புகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கப்படுகிறது என்பது குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளேன். அவர்களும் அதை பார்த்து கற்று வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்