விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 359 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் 359 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் ஒரே நாளில் 359 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா முதல் அலையின்போது மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரு நாள் பாதிப்பு 234 ஆக இருந்தது. இந்த ஆண்டு நேற்று முன்தினம் 298 ஆக உயர்ந்த நிலையில் நேற்று அதையும் தாண்டி அதிகபட்சமாக 359 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி கொரோனா புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,551 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஒருவர் சாவு
மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் சகுந்தலா நகரை சேர்ந்த 31 வயதுடைய வாலிபருக்கு உடல்நிலை மிகவும் மோசமானதால் அங்கிருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 132 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 16,718 ஆக உயர்ந்துள்ளது.