விழுப்புரத்துக்கு தேவையின்றி வருபவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் விழுப்புரத்துக்கு தேவையின்றி வருபவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள். 4 இடங்களில் பேரிகார்டு வைத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Update: 2021-04-29 17:22 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. விழுப்புரம் நகரத்திலும் 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இதையடுத்து இவர்கள் வசிக்கும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வெளியே எங்கும் செல்லாத அளவிற்கு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் விழுப்புரம் நகரில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள், அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருகிறோம் என்ற பெயரில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கடைவீதிகள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் திரண்டு வருவதே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

திருப்பி அனுப்பி வைப்பு 

இதனை தடுக்கும் வகையில் காவல்துறை முன்எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கிராமப்புற மக்கள், விழுப்புரம் நகருக்குள் வருவதை தடுக்கும் வகையில் நகர எல்லைப்பகுதிகளான கோலியனூர் கூட்டுசாலை, முத்தாம்பாளையம், மாம்பழப்பட்டு சாலை, ஜானகிபுரம் புறவழிச்சாலை ஆகிய இடங்களில் போலீசார், பேரிகார்டு மூலம் தடுப்புகள் அமைத்து அத்தியாவசிய பணிகள் மற்றும் மருத்துவ தேவைகளை தவிர பிற தேவைகளுக்காக வரும் கிராமப்புற மக்களை நகருக்குள் செல்லாதவாறு தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனையும் மீறி நகருக்குள் வர பிரதான சாலைகளில் வராமல் தெருக்கள் வழியாக பொதுமக்கள் புகுந்து வரக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு அவ்வாறு வருபவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டு நகருக்குள் வராதபடி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

மேலும் செய்திகள்