கர்நாடகாவில் முழு ஊரடங்கு எதிரொலி: இருமாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தம் மாநில எல்லையில் அதிகாரிகள் தீவிர சோதனை
கர்நாடகாவில் முழு ஊரடங்கு எதிரொலியாக இருமாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநில எல்லையில் வாகனங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
ஓசூர்,
கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அந்த மாநில அரசு நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் 14 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இதையொட்டி அங்குள்ள கோவில்கள், சினிமா தியேட்டர்கள், மால்கள், கடைகள், மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. பஸ் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் கர்நாடக அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் தமிழகத்தில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்களும் நேற்று முன்தினம் இரவு முதல் நிறுத்தப்பட்டது. தமிழகத்தின் இருந்து கர்நாடகத்திற்கு செல்லும் பஸ்கள் ஓசூர் வரை இயக்கப்பட்டு ஓசூர் பஸ் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல ஓசூரில் இருந்து பெங்களூரு, மாலூர், கோலார் போன்ற பகுதிகளுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. இதனிடையே ஓசூரிலிருந்து கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளிக்கு இயக்கப்பட்டு வரும் டவுன் பஸ்கள் தமிழக எல்லையான ஜுஜுவாடி சோதனைச்சாவடி வரை சென்று பயணிகளை இறக்கிவிடுகின்றன.
நேற்று இந்த டவுன் பஸ்களில் குறைந்த அளவிலேயே மக்கள் பயணம் செய்தனர். தமிழகம்-கர்நாடகம் இடையே பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையில் லாரிகள், கார்கள் போன்ற வாகனங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. தமிழக எல்லையில் இந்த வாகனங்களை வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி இ-பாஸ் உள்ளதா? என்று சோதனையிட்ட பிறகே, தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்கின்றனர். மேலும், வாகனங்களில் வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதித்தும், வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்தும் அனுப்பி வருகின்றனர்.