கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளுக்கு மளிகை பொருட்கள்

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளுக்கு மளிகை பொருட்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

Update: 2021-04-29 14:29 GMT
ஊட்டி

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட  சுற்றுலா வழிகாட்டிகளுக்கு மளிகை பொருட்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

சரக்கு வாகனங்கள் அனுமதி

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்த சுற்றுலா வழிகாட்டிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி சுற்றுலா வழிகாட்டிகளுக்கு மளிகை பொருட்களை வழங்கினார். இதில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் அடையாள அட்டை பெற்ற 110 பேருக்கு வழங்கப்பட்டது. 

பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடகா மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய கர்நாடகா எல்லைகள் மூடப்பட்டு உள்ளது. அங்கிருந்து மக்கள் வருவது தடுக்கப்பட்டு இருக்கிறது. 

கேரளா மாநிலத்தில் இருந்து வணிகரீதியாக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் அனுமதியுடன் சென்று வருகின்றன. தேவையில்லாமல் மக்களை ஏற்றி வருகிறார்களா என்றும் சோதனைச்சாவடிகளில் கண்காணிக்கப்படுகிறது.

பயணம் செய்யக்கூடாது

மாவட்ட எல்லையையொட்டிய டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கூட்டம் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. அரசு அலுவலர்கள், ஊழியர்கள் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வந்து பணிபுரிந்து வருகின்றனர். 

தடுப்பு நடவடிக்கையாக அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் பயணம் செய்யக்கூடாது என்று கடந்த ஆண்டை போல் உத்தரவிடப்பட்டு உள்ளது.

சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், சுற்றுலா தொடர்பாக வர வேண்டிய அவசியம் இல்லை. குழந்தை திருமணங்கள் நடப்பதை தடுக்க போலீசார், குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், சமூக நல அலுவலர்கள், தனியார் தொண்டு நிறுவனங்களுடன் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார். 

நிகழ்ச்சியில் ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா, உதவி சுற்றுலா அலுவலர் துர்கா தேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்