கொரோனா தடுப்பூசி செலுத்தினால் உயிரிழப்புகளை தடுக்க முடியும்
கொரோனா தடுப்பூசி செலுத்தினால் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் கூறினார்.
கூடலூர்
கொரோனா தடுப்பு வழிமுறைகள் மற்றும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு முகாம், கூடலூர் அருகே உள்ள ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. ராஜ்குமார் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போடாமல் உள்ளனர். தடுப்பூசியை செலுத்திக்கொண்டால் உயிரிழப்புகளை தடுக்கலாம்.
மேலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். இதற்கு அந்தந்த ஆர்.டி.ஓ.விடம் உரிய அனுமதி பெற வேண்டும். ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். கொரோனா பரவலை தடுக்க அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அரசு டாக்டர் லோகேஷ் பேசும்போது, அவசியமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். கை, கால்களை சோப் போட்டு கழுவ வேண்டும். தடுப்பூசி போட்டாலும் மீண்டும் கொரோனா ஏற்படுகிறது என்ற தகவல் வருகிறது. அது உண்மைதான். ஆனால் தடுப்பூசி போட்டால் உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என்றார்.
இதில் தாசில்தார் தினேஷ், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜெய்சங்கர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நம்பிராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிதுரை மற்றும் வியாபாரிகள், டிரைவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.