சினிமா படப்பிடிப்பு குழுவினருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல் அருகே கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத சினிமா படப்பிடிப்பு குழுவினருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-04-29 12:55 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள கோணப்பட்டி கிராமத்தில் அழகிய கண்ணே என்ற சினிமா படப்பிடிப்பு நேற்று நடந்தது. 

இந்த நிலையில் படப்பிடிப்பு குழுவினர்  கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதாக சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தகவல் வந்தது. 

அதன்பேரில் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி, கொசவபட்டி சுகாதார ஆய்வாளர் பெருமாள் மற்றும் கொரோனா தடுப்பு குழுவினர் அங்கு சென்றனர். 

அப்போது சினிமா படப்பிடிப்பு குழுவினர், கிராம மக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூட்டமாக கூடி நின்றதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடையந்தனர். 

மேலும் அவர்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தனர். 

இதுகுறித்து  படப்பிடிப்பு குழுவினரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். 

அப்போது அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முன்அனுமதி கடிதம் பெற்று இருப்பதாக கூறினர். 

எனினும் அதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக படப்பிடிப்பு நடத்தியதற்காக சினிமா குழுவினருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும் அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்