சொத்து தகராறில் விவசாயி அடித்து கொலை
நத்தம் அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டார்.
செந்துறை:
சொத்து தகராறில் முன்விரோதம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள குட்டுப்பட்டி-கரந்தமலையூர் பள்ளத்துகாட்டை சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு (வயது 40). விவசாயி.
அதே ஊரை சேர்ந்தவர் தங்கராஜ் (36). இவர்கள் 2 பேரும் உறவினர்கள். இவர்களுக்கிடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இது தொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில், தனது தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் ஏறி தங்கராஜ் காய்களை பறித்து கொண்டிருந்தார்.
தலையில் விழுந்த பலாக்காய்
அப்போது அங்கு வந்த வெள்ளைக்கண்ணு, தான் வைத்திருந்த டார்ச் லைட்டை மரத்தில் அடித்து பலாக்காய் பறிப்பது யார்? என்று விசாரித்தார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ், மரத்தில் இருந்து பலாக்காயை பறித்து வெள்ளைக்கண்ணுவின் தலையில் போட்டார். இதனால் நிலைதடுமாறிய வெள்ளைக்கண்ணு கீழே விழுந்தார். சிறிதுநேரத்தில் அவர் எழுந்து விட்டார்.
அடித்து கொலை
இதற்கிடையே தங்கராஜூம் மரத்தில் இருந்து கீழே இறங்கினார். தன்மீது பலாக்காயை வீசிய ஆத்திரத்தில் இருந்த வெள்ளைக்கண்ணு, தான் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் தங்கராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வெள்ளைக்கண்ணு வைத்திருந்த உருட்டுக்கட்டையை தங்கராஜ் பறித்தார். பின்னர் அந்த கட்டையால், வெள்ளைக்கண்ணுவை தங்கராஜ் சரமாரியாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே வெள்ளைக்கண்ணு பரிதாபமாக இறந்தார்.
கைது
இது குறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் வெள்ளைக்கண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-------