தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பில் உள்ளது- கலெக்டர் ராமன் தகவல்

தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பில் உள்ளது என்று கலெக்டர் ராமன் கூறினார்.

Update: 2021-04-28 23:57 GMT
சேலம்:
தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பில் உள்ளது என்று கலெக்டர் ராமன் கூறினார்.
கொரோனா வைரஸ்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்வதற்கு தனியார் ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பில் உள்ளது. அதே போன்று தேவையான படுக்கை வசதிகள், உயிர் காக்கும் கருவிகளும் உள்ளன.
படுக்கை வசதிகள்
இதன்படி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 550 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. கூடுதலாக 350 படுக்கைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் மாவட்டத்தில் 23 தற்காலிக கொரோனா மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 2,500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 33 தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளன. கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன. ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை மேலும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை சேலம் மாவட்டத்திற்கு தேவையான அளவு வழங்கிய பின்னரே இதர பகுதிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், குறைத்த விலைக்கு ஆக்சிஜனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுவன பொறுப்பாளார்கள், விநியோகஸ்தர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவ அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்