24 மணி நேரமும் உடல்களை தகனம் செய்வதால் பிண வாடை வீசுகிறது; குடியிருப்புவாசிகள் வேதனை
பெங்களூரு சாம்ராஜ்பேட்டை மின் மயானத்தில் 24 மணி நேரமும் உடல்கள் தகனம் செய்யப்படுவதால் பிண வாடை வீசுவதாக குடியிருப்புவாசிகள் வேதனையுடன் கூறினர்.
பெங்களூரு: பெங்களூரு சாம்ராஜ்பேட்டை மின் மயானத்தில் 24 மணி நேரமும் உடல்கள் தகனம் செய்யப்படுவதால் பிண வாடை வீசுவதாக குடியிருப்புவாசிகள் வேதனையுடன் கூறினர்.
உடல்கள் தகனம்
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தலைநகர் பெங்களூருவில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இங்கு தினசரி 100 பேர் இறந்து வருகிறார்கள். இதனால் பெங்களூருவில் உள்ள 13 மின் மயானங்களிலும் 24 மணி நேரமும் உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக உடல்களை கொண்டு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மின் மயானங்கள் முன்பு நீண்ட வரிசையில் நிற்கின்றன. உடல்களை தகனம் செய்யும் விஷயத்தில் உடல்களுக்கு டோக்கன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்ய உறவினர்கள் 2 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பிண வாடை அடிப்பதால்...
பெங்களூரு சாம்ராஜ் பேட்டையில் உள்ள மின் மயானத்தில் 24 மணி நேரமும் உடல்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக உடல்கள் அங்கு மின் மயானத்திற்கு வெளியே ஆம்புலன்கள் வாகனங்களில் நீண்ட வரிசையில் நிற்கின்றன.
இந்த உடல்கள் தகனம் செய்யப்படுவதால் அந்த மின் மயானத்தை ஒட்டியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர். பிண வாடை அடிப்பதால் வீடுகளில் இருக்க முடியவில்லை என்று அந்த குடியிருப்புவாசிகள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "இந்த சாம்ராஜ்பேட்டை மின் மயானத்தில் 24 மணி நேரமும் பிணங்கள் எரிக்கப்படுகின்றன. இதனால் அருகில் வசிக்கும் எங்களின் வீடுகளுக்கு பிண வாடை வருகிறது. எங்கள் வீடுகளில் குழந்தைகள், முதியவர்கள் உள்ளனர். அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்" என்றனர்.