மின்கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதி நாதஸ்வர கலைஞர் பலி
தென்காசி அருகே மின்கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதி நாதஸ்வர கலைஞர் இறந்தார்.
தென்காசி, ஏப்:
தென்காசி அருகே உள்ள இலஞ்சி சிற்றாற்று வீரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 42). இவர் இலஞ்சி குமாரர் கோவில் நாதஸ்வர வித்வானாக வேலை பார்த்து வந்தார். இவர் ஐந்தருவியில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
குற்றாலம் பழைய போலீஸ் நிலையம் அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மாரியப்பன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.