நீலகிரி-கர்நாடகா இடையே வாகன போக்குவரத்து நிறுத்தம்

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நீலகிரி-கர்நாடகா இடையே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2021-04-28 19:06 GMT
கூடலூர்,

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் கர்நாடகாவில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து கூடலூர் வழியாக நாகப்பட்டினத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. 

இதேபோன்று குண்டல்பேட்டில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு சாலை செல்கிறது. இதற்கிடையில் கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அங்கு வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு, அனைத்து சாலைகளும் மூடப்பட்டு உள்ளது. இதனால் நீலகிரி-கர்நாடகா இடையே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.

நீலகிரி-கர்நாடக எல்லையான கக்கநல்லாவில் சாலை மூடப்பட்டு உள்ளது. அங்கு நீலகிரி மாவட்ட போலீசார் முகாமிட்டு தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்களை திருப்பி அனுப்புகின்றனர். எனினும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து கர்நாடக போலீசார் கூறும்போது, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்