கொரோனா தடுப்பூசி போட்டால் ஒரு கிலோ தக்காளி இலவசம் பொதுமக்களை ஊக்கப்படுத்த ஊராட்சி தலைவர் வழங்கினார்
கொரோனா தடுப்பூசி போட்டால் ஒரு கிலோ தக்காளி இலவசம் பொதுமக்களை ஊக்கப்படுத்த ஊராட்சி தலைவர் வழங்கினார்
சோமரசம்பேட்டை,
கொரோனா இரண்டாவது அலை பரவல் வேகமெடுத்து வருகிறது. அதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தலுடன் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை அவசியம் எடுத்துக்கொள்ளுமாறும் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திருச்சி அருகே ஊராட்சி தலைவர் ஒருவர் மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வந்தால் 1 கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி வருகிறார்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்டது புங்கனூர் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவர் தாமோதரன் கொரோனா தடுப்பூசியின் பயன்களை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அத்துடன் தடுப்பூசி போட்டால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், ஆரம்பசுகாதார நிலையத்துக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு, அதற்கான அத்தாட்சியை கண்பித்து ஊராட்சி தலைவரிடம் ஒருகிலோ தக்காளியை பெற்று செல்கிறார்கள். மக்களை ஊக்கப்படுத்தவே இந்த நூதன விழிப்புணர்வை கையில் எடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.