அன்னதான திட்டத்தின் கீழ் ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்களுக்கு தினமும் `பார்சல் உணவு'
அன்னதான திட்டத்தின் கீழ் ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்களுக்கு தினமும் `பார்சல் உணவு' வழங்கப்பட்டது.
திருச்சி, ஏப்.29-
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால், அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கோவில் விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவில்களில் பக்தர்களுக்கு சாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நுழைவுவாயிலில் நிண்படி, தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
அதே வேளையில் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் மதியவேளையில் பக்தர்களுக்கு அன்னதானம் திட்டம் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. கோவில்களில் அன்னதான திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவை ஓட்டல்களில் கொடுப்பதுபோல பார்சல் கட்டி உணவு வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் 350-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு ‘பார்சல் உணவு' வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல அதன் உபகோவில்களான திருவெள்ளறை பெருமாள் கோவில், உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில், அன்பில் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அன்னதானம் பக்தர்களுக்கு பார்சல்களாக வழங்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பார்சல் உணவு தீர்ந்து விடுவதால் பக்தர்கள் சிலருக்கு கிடைக்காமல் ஏமாற்றம் அடைவதாக கூறப்படுகிறது. ஆகவே, கூடுதல் பார்சல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.