நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் தர்ணா
தச்சம்பட்டறை நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவேரிப்பாக்கம்
நேரடி நெல் கொள்முதல் நிலையம்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தச்சம்பட்டறை கிராமம். இந்த கிராமத்தை சுற்றி உள்ள உத்திரம்பட்டு, பெருவளையம், சிறுவளையம், ஓச்சேரி, ஆயர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தச்சம்பட்டறையில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், தாங்கவி விளைவிக்கும் நெல்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் தற்போது 13,515 நெல் மூட்டைகள் இருப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த சுமார் 1,500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
தர்ணா போராட்டம்
இந்த நெல் மூட்டைகளை எடை போடாமல் வெளியே கொட்டி வைத்துள்ளனர். இந்த நிலையில் தச்சம்பட்டறை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை் நேற்று முதல் மூட அரசு அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வந்துள்ளது. இந்த செய்தி விவசாயிகளுக்கு தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் எதிரே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். இருப்பினும் அங்கு அரசு அதிகாரிகள் யாரும் வராததால் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
மூட உத்தரவு?
இது குறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த 27 நாட்களாக எங்கள் நெல் மூட்டைகளை எடை போடாமல் வெளியே கொட்டி வைத்துள்ளோம். ஆனால் அரசு அதிகாரிகள் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நேற்று முதல் மூட கூறியதாக கூறுகின்றனர். இதனால் எங்கள் வாய்வாதாரம் முடங்கி போய் உள்ளது.
நாங்கள் கொண்டு வந்து இறங்கியுள்ள நெல் மூட்டைகளை அரசு அதிகாரிகள் கொள் முதல் செய்ய வில்லை எனில் ரோட்டில் நெல் மணிகளை கொட்டி போராடவும் தயங்க மாட்டோம். மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.