2 மாத கர்ப்பிணி சாவு
கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2 மாத கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார்.
தேனி :
தேனி மாவட்டம் கூடலூர் முத்தரையர் தெரு சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சவுமியா (வயது 21).
இவர் 2 மாத கர்ப்பிணி. இந்த நிலையில் நேற்று சவுமியாவுக்கு காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
அப்போது அவருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
இதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.
அதற்குள் சவுமியா பரிதாபமாக இறந்தார்.
உடனே அவருடைய உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
பின்னர் சவுமியாவின் உறவினர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து சவுமியாவின் உடலை பெற்றுக்கொண்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.