ரெயில் பெட்டிகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது
மதுரை ரெயில்வே கோட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரெயில் பெட்டிகளுக்கு கிருமிநாசினி தெளிப்பு
மதுரை
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தின் அண்டைமாநிலமான கேரளா மற்றும் கர்நாடகத்தில் கொரோனா நோய்ப்பரவல் அதிக அளவு உள்ளது. அதனை தொடர்ந்து அந்த மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மதுரையில் இருந்து நெல்லை, நாகர்கோவில் வழியாக கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூருக்கு தினசரி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தினமும் கேரள மாநிலம் சென்று வருவதால் மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனையில், சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அந்த ரெயிலின் பெட்டிகள் முழுவதும் கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. இந்த பணிகள் ரெயில் பெட்டிக்குள்ளும் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல, கர்நாடக மாநிலம் மைசூருக்கு தூத்துக்குடியில் இருந்து தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலின் பெட்டிகள் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் வைத்து கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே, ரெயில் நிலையத்துக்குள் வந்து செல்லும் பயணிகளுக்கு தானியங்கி உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி மூலம் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. முக கவசம் அணிந்து வர கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரெயில் பெட்டிக்குள் கைகளை சுத்தம் செய்ய ஏதுவாக கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது என்பது உள்பட பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.