தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி ரூ.7 லட்சம் தப்பியது
தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஏ.டி.எம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏ.டி.எம். மையம்
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள், சரக்கு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தாரின் வசதிக்காக ஏ.டி.எம் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஏ.டி.எம் மையம் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த வங்கி பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தெர்மல் நகர் போலீசாருக்கும், வங்கி உயரதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஏ.டி.எம் மையத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சி குறித்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே ஏ.டி.எம். மையத்தில் வங்கி அதிகாரிகள் நடத்திய சோதனையில் எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் பணம் திருட்டு போகாமல் இருந்தது தெரியவந்தது.
கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர் பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முடியாமல் கொள்ளை முயற்சியை கைவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட நபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபரின் விரல் பதிவுகள் நகல் எடுக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.