எடப்பாடி அருகே விசைத்தறி ஜவுளி குடோனில் பயங்கர தீ-6¾ லட்சம் ரூபாய் நோட்டுகள் எரிந்து சாம்பல்
எடப்பாடி அருகே விசைத்தறி ஜவுளி குடோனில் பயங்கர தீ ஏற்பட்டது. இதில் 6¾ லட்சம் ரூபாய் நோட்டுகள் எரிந்து சாம்பலானது.
எடப்பாடி:
எடப்பாடி அருகே விசைத்தறி ஜவுளி குடோனில் பயங்கர தீ ஏற்பட்டது. இதில் 6¾ லட்சம் ரூபாய் நோட்டுகள் எரிந்து சாம்பலானது.
ஜவுளி குடோன்
எடப்பாடி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி சாலையில் வெங்கடேசன், சீனிவாசன், முத்தையன் ஆகியோருக்கு சொந்தமான விசைத்தறி ஜவுளி குடோன் உள்ளது. இந்த குடோனில் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களை அடுக்கி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென்று அந்த விசைத்தறி ஜவுளி குடோனில் பயங்கர தீ ஏற்பட்டது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் எடப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் ராமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
ரூபாய் நோட்டுகள் எரிந்தன
எனினும் குடோன் முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் உற்பத்தி செய்து வைக்கப்பட்ட ஜவுளிகள் மற்றும் அலுவலக அறையில் உள்ள கணினி சாதனங்கள் அனைத்தும் தீயில் எரிந்தன. இதுமட்டுமின்றி தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க பீரோவில் வைத்திருந்த 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பலான நோட்டுகள் எரிந்து சாம்பலானது.
மின் கசிவு காரணமாக குடோனில் தீப்பிடித்து இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து எடப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.