ஏற்காட்டில் மரங்களை வெட்டி, மண் எடுத்ததால் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ஏற்காட்டில் மரங்களை வெட்டி, மண் எடுத்ததால் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-04-27 23:15 GMT
ஏற்காடு:
ஏற்காட்டில் மரங்களை வெட்டி, மண் எடுத்ததால் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
மண்ணை எடுத்தனர்
ஏற்காடு ஏரி அருகே ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான நிலம் சுமார் 20 ஏக்கர் உள்ளது. ஆண்டுதோறும் கோடை விழா ஏற்பாடுகள் இந்த இடத்தில்தான் செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் தோட்டக்கலைத்துறையினர் நேற்று அங்கு இருந்த சுமார் 100 வருடங்களுக்கு மேல் பழமையான மரங்களை வேரோடு வெட்டி சாய்த்து விட்டு, பூங்காவின் தேவைக்காக மண்ணை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து, தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
அப்போது அவர்கள் கூறுகையில், இந்த இடத்தில்தான் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படுகிறது. ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான நிலத்தில் எந்தவித அனுமதியும் பெறாமல் மண் எடுப்பது சட்டப்படி குற்றமாகும். மேலும் மண் எடுக்கும் போது, அந்த பகுதி பள்ளமாக மாறி விடும். இதே நிலை தொடர்ந்தால் இந்த இடத்தில் கோடை விழா நடத்த இயலாது. எனவே அகற்றிய மண்ணை மீண்டும் கொட்ட வேண்டும் என்றனர். 
பேச்சுவார்த்தை
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அதிகாரி செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் பெரியசாமி ஆகியோர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இனி எந்த ஒரு அனுமதியும் பெறாமல் மண் எடுக்க மாட்டோம் என உறுதி அளித்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்