ஆக்சிஜன் கிடைக்காமல் 8 கொரோனா நோயாளிகள் பலி
கோலார் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சு திணறி 8 கொரோனா நோயாளிகள் பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரி உள்பட 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோலார்: கோலார் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சு திணறி 8 கொரோனா நோயாளிகள் பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரி உள்பட 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகாித்து உள்ளது. படுக்கை வசதி கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் அவதிப்படும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது. சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு செயற்கை சுவாச(வெண்டிலேட்டர்) கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தற்போது புதிய பிரச்சினையாக செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்து வருகிறார்கள்.
ஆக்சிஜன் தட்டுப்பாடு
நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதேபோல, கர்நாடகத்திலும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இதனால் படுக்கை கிடைக்காமல் ஏராளமான நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் அரசு மருத்துவமனைகளில் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடகத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் அரசு ஆஸ்பத்திரியில் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
8 பேர் சாவு
கர்நாடக மாநிலம் கோலார் டவுனில் எஸ்.என்.ஆர். அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் 20 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி இரவு அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் சரியாக கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களை சுகாதாரத்துறையினர் எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.
டாக்டர்கள் அலட்சியத்தால் தான் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியதாகவும், இதன்காரணமாக சிகிச்சை கிடைக்காமல் 8 பேர் இறந்து விட்டதாகவும் குடும்பத்தினர், உறவினர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். மேலும் ஆக்சிஜன் செலுத்துவதில் குளறுபடி ஏற்பட்டு இருப்பது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு செல்போன் மூலம் நோயாளிகளின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், யாரும் அதுபற்றி கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.
3 பேர் பணி இடைநீக்கம்
கோலார் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் 8 பேர் உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து மந்திரி சுதாகர் நேற்று சிக்பள்ளாப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆக்சிஜன் இணைப்பு கொடுக்கும் விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டதில் மூச்சு திணறல் ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். இது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மெத்தன போக்கையே காட்டுகிறது. பொறுப்பற்ற முறையில் பணியாற்றி 8 பேர் உயிரிழப்புக்கு காரணமான எஸ்.என்.ஆர். அரசு ஆஸ்பத்திரியின் ஆக்சிஜன் இணைப்பு பிரிவு அதிகாரி உள்பட 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகளின் மெத்தனப்போக்கு
இதுபற்றி அறிந்த முனிசாமி எம்.பி. நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கு காரணமாக கொரோனா பாதித்த 8 பேர் பரிதாபமாக பலியாகினர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டப்படி நடவடிக்கை
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி விஜயகுமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மூச்சு திணறல் ஏற்பட்டு 8 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 8 பேர் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.