அரசின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை; பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரிக்கை

பெங்களூருவில் மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அரசின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரித்துள்ளார்.

Update: 2021-04-27 21:45 GMT
பெங்களூரு: பெங்களூருவில் மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அரசின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

வியாபாரிகள் மீது நடவடிக்கை

பெங்களூரு உள்பட மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடுமையான கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வருகிற 11-ந் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும். காலை 6 மணியில் இருந்து 10 மணிவரை அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 4 மணிநேரம் அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்கி கொள்ளலாம். இந்த 4 மணிநேரமும் கடைகளில் கெரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பொருட்களை மக்கள் வாங்க வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும், வியாபாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி.

 10 மணிக்கு பின்பு வியாபாரிகள் தாங்களாகவே கடைகளை அடைக்க வேண்டும். இல்லையெனில் வியாபாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசின் உத்தரவை மதித்து...

வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்கள் தாங்கள் பயணம் செய்த ரெயில், விமானம் உள்ளிட்ட டிக்கெட்டுகளை வைத்து கொண்டு செல்லலாம். அதுபோல், அரசு உத்தரவிட்டுள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள், தங்களது அடையாள அட்டையை காட்டி வேலைக்கு செல்லலாம். திருமண நிகழ்ச்சிகளில 50 பேருக்கு மேல் கலந்து கொள்ள கூடாது. 

கோவில்களை திறக்க அனுமதி கிடையாது. பெங்களூருவில் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிய அனுமதி கிடையாது. அரசின் உத்தவை மதித்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மக்கள் வெளியே சுற்றுவதை தவிா்க்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்