கர்நாடக காங்கிரஸ் சார்பில் மாநில கொரோனா உதவி மையம் அமைக்க முடிவு; டி.கே.சிவக்குமார் பேட்டி
கர்நாடக காங்கிரஸ் சார்பில் மாநில அளவிலான கொரோனா உதவி மையத்தை தொடங்க முடிவு செய்துள்ளோம் என்று அக்கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் சார்பில் மாநில அளவிலான கொரோனா உதவி மையத்தை தொடங்க முடிவு செய்துள்ளோம் என்று அக்கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
திடீரென ஊரடங்கு
கர்நாடக காங்கிரஸ் சார்பில் மாநில அளவிலான கொரோனா உதவி மையம் அமைக்க முடிவு செய்துள்ளோம். தனியார் மருத்துவமனைகளுக்கு மருந்து-மாத்திரைகளை வழங்கவும் நாங்கள் உதவி செய்வோம். கர்நாடக அரசு திடீரென ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு தலா நபர் ஒருவருக்கு மாதத்திற்கு 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது. அதை இந்த அரசு 2 கிலோவாக குறைத்துள்ளது. இதற்காக இந்த அரசு வெட்கப்பட வேண்டும்.
உடல் ஆரோக்கியம்
கொரோனா பரவலை தடுப்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டது. தற்போதைக்கு நாங்கள் கஷ்டத்தில் உள்ள மக்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம். இது மக்களின் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம். இத்தகைய நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு ஆதரவாக இருக்க நாங்கள் விரும்புகிறோம். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த இது சரியான நேரம் அல்ல.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினாார்.