குமாரபாளையத்தில் ரூ.2½ லட்சத்துக்கு குழந்தை விற்பனை; புரோக்கர் உள்பட 2 பேர் கைது
குமாரபாளையத்தில் ரூ.2½ லட்சத்துக்கு குழந்தை விற்பனை செய்த புரோக்கர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம்,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வட்டமலை குள்ளங்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி தீபா (வயது 17). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடன் தொல்லை காரணமாக சண்முகம் கடந்த 15 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். பின்னர் தீபாவின் குழந்தையை அவருடைய தாய் மகேஸ்வரி, தனது அக்கா வீட்டுக்காரர் சின்ராஜ் ஆகியோரது வற்புறுத்தலின்பேரில் ரூ.2½ லட்சத்துக்கு திருப்பூரை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு விற்பனை செய்துள்ளனர்.
குழந்தை விற்பனைக்கு புரோக்கராக திருப்பூரை சேர்ந்த நாகராஜ் (61), அதற்கு உடந்தையாக குள்ளங்காடு பகுதியை சேர்ந்த கார்த்தி (41) ஆகியோர் செயல்பட்டு உள்ளனர். தற்போது தீபா தனது தாயை விட்டு பிரிந்து நாமக்கல்லில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் உள்ளார்.
இந்தநிலையில் தனது குழந்தையின் மீது பாசம் ஏற்படவே, தீபா குழந்தைகள் நல அலுவலரிடம் குழந்தை விற்பனை விவரத்தை கூறினார். அதன்பேரில் குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப்பிரியா குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார்.
தொடர்ந்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த நாகராஜ் மற்றும் கார்த்தி ஆகியோரை கைது செய்தார். மேலும் குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த மகேஸ்வரி, தீபா அக்காள் கணவர் சின்னராஜ் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.