ரெம்டெசிவர் மருந்தை சட்டவிரோதமாக விற்ற தனியார் மருத்துவமனை டாக்டர் உள்பட 2 பேர் கைது

பெங்களூரு அருகே சட்டவிரோதமாக ரெம்டெசிவர் மருந்தை விற்பனை செய்த தனியார் மருத்துவமனை டாக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-04-27 21:02 GMT
பெங்களூரு: பெங்களூரு அருகே சட்டவிரோதமாக ரெம்டெசிவர் மருந்தை விற்பனை செய்த தனியார் மருத்துவமனை டாக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டாக்டர் கைது

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக வழங்கப்படும் ரெம்டெசிவர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு்ள்ளது. இதையடுத்து, அந்த மருந்தை கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு எச்சரித்துள்ளது. இந்த நிலையில், பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகாவில் சட்டவிரோதமாக ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது.

இந்த சம்பவத்தில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசாா் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், ஜிகினி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ரெம்டெசிவர் மருந்தை சட்டவிரோதமாக விற்றதாக 2 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் அர்மான் அலி, ரக்‌ஷித் என்று தெரியவந்தது. இவர்களில் அர்மான் அலி டாக்டர் ஆவார். அவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனை

அதுபோல், அர்மான் அலி பணியாற்றும் அதே மருத்துவமனையில் ரக்‌ஷித்தும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். மருத்துவமனையில் உள்ள ரெம்டெசிவர் மருந்தை நோயாளிகளுக்கு வழங்குவதாக கூறி, சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு அதிக விலைக்கு விற்று 2 பேரும் பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது. அதாவது ஒரு பாட்டில் மருந்தை ரூ.15 ஆயிரத்திற்கு 2 பேரும் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

அவர்களிடம் இருந்து ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேர் மீதும் ஜிகினி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்