கரூர்
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை தொடர்ந்து தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் கோவில்கள், சினிமா தியேட்டர்கள், கேளிக்கை விடுதிகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றை மூட உத்தரவிட்டுள்ளது. அதன்படி தியேட்டர்கள், கோவில்கள், பூங்காக்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அந்தவகையில் கரூரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆசாத் பூங்காவும் நேற்றுமுன்தினம் முதல் மூடப்பட்டது.
கரூர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஆசாத் பூங்காவில் மேற்கூரையுடன் கூடிய நடைபயிற்சி பாதை, சிறுவர்கள் விளையாடக்கூடிய விளையாட்டு அம்சங்கள், செயற்கையான நீர் ஊற்று, மகாத்மா காந்தி திருவுருவ சிலையை சுற்றிலும் வண்ண மீன்கள் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால் இந்த பூங்கா பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்து வந்தது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் வயதானவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர். தினமும் ஏராளமான குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் வந்து விளையாடி மகிழ்ந்தனர். ஆனால தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகளால் ஆசாத் பூங்கா மூடப்பட்டது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.