கும்பகோணம் அருகே முககவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் மீது போலீசார் தாக்குதல் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

கும்பகோணம் அருகே முககவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை போலீசார் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2021-04-27 19:03 GMT
கும்பகோணம்:-

கும்பகோணம் அருகே முககவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை போலீசார் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக முககவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். 
இதற்காக போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மாடாகுடி பகுதியில் போலீசார் முககவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். 

லத்தியால் தாக்குதல்

அப்போது அந்த வழியாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை சேர்ந்த சுந்தர் மகன் பிரவீன்(வயது 25) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் முககவசம் அணியவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரை போலீசார் வழிமறித்துள்ளனர். 
இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை சாலையின் ஓரமாக நிறுத்துவதற்காக போலீசாரை தாண்டி மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். ஆனால் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் செல்கிறார் என நினைத்த போலீசார் அவர் மீது லத்தியால் தாக்கி உள்ளனர். இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அங்கு விளம்பரத்திற்காக வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு மீது மோதியது. 

படுகாயம்-மருத்துவமனையில் அனுமதி

இதில் காலில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
இது குறித்து பட்டீஸ்வரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் தாக்கியதில் வாலிபர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்