பொள்ளாச்சியில் கொரோனா விதிகளை மீறிய கடைக்காரர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 400 அபராதம்
பொள்ளாச்சியில் கொரோனா விதிகளை மீறிய கடைக்காரர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி,
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, டீ கடைகளில் பார்சல் சேவை, மாநகரம், நகரப்பகுதியில் சலூன்கள் மூடல் என பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று பொள்ளாச்சி நகராட்சி நகர்நல அலுவலர் ராம்குமார் உத்தரவின்பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், சிவக்குமார், ஜெயபாரதி ஆகியோர் பல்லடம் ரோடு, நியூஸ்கீம் ரோடு, கோவை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி டீ கடையிலேயே டீக்குடிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கிய கடை உரிமையாளர்கள், சலூன் கடையை திறந்து இருந்த ஒருவர், கடையில் அமர்ந்து வாடிக்கையாளர் சாப்பிட இடம் அளித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதில் மொத்தம் ரூ.5 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், கொரோனா விதிமுறைகளை மீறக்கூடாது என டீக்கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.