கொரோனா தொற்றினால் ஆக்சிஜன் அளவு குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? சித்த மருத்துவ அதிகாரி விளக்கம்
கொரோனா தொற்றினால் ஆக்சிஜன் அளவு குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சித்த மருத்துவ அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
திருச்சி,
கொரோனா தொற்றினால் ஆக்சிஜன் அளவு குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சித்த மருத்துவ அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
ஆக்சிஜன் குறைவு
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் அளவு குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் காமராஜ் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவாது:-
சூரணம்
அமுக்கரா சூரணத்தை குழந்தைகளுக்கு (மூன்று வயதிற்கு மேல்) 250 மில்லி கிராம் எடுத்து தேனில் குழைத்து காலை இரவு ஆகாரத்திற்கு பிறகு கொடுக்கலாம். 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 500 மில்லி கிராமில் இருந்து ஒரு கிராம் எடுத்து தேனில் குழைத்து இரவில் ஆகாரத்திற்குப் பிறகு கொடுக்கலாம். சர்க்கரை நோயாளிகள் பாலில் கலந்து சாப்பிடலாம்.
தாளிசாதி சூரணத்தை குழந்தைகளுக்கு (3 வயதிற்கு மேல்) 250 மில்லி கிராம் எடுத்து தேனில் குழைத்து காலை இரவு ஆகாரத்திற்குப் பிறகு கொடுக்கலாம். 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 500 மில்லி கிராமில் இருந்து ஒரு கிராம் எடுத்து தேனில் குழைத்து ஒரு வேளை ஆகாரத்திற்கு பிறகு கொடுக்கலாம்.
திரிபலா சூரணத்தை மூலம், ஆசனவாய்க் கடுப்பு, ஆசனவாய் அரிப்பு மலக்கட்டு, மலம் கழிப்பதில் சிரமம், மலத்துடன் ரத்தம் வெளியேறுவது போன்ற குறிகுணங்கள் ஏற்படாமல் தடுத்து உடல் சூட்டை தடுத்து உடலை குளிர்ச்சி அடைய செய்கிறது. திரிபலா சூரணத்தை 1 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு 250 மில்லி கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து இரவு படுக்கும் போது கொடுக்கலாம். 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 கிராம் வெந்நீரில் கலந்து கொடுக்கலாம்.
நெல்லிக்காய் லேகியம்
வீட்டில் உள்ள அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, உடல் வலுப்பெற ரத்த சோகை நீங்க, மூட்டுவலி, ஆஸ்துமா, இதய நோய், கண்பார்வை குறைபாடு, ஞாபக சக்தி அதிகரிக்க, இளமையாக இருக்க நெல்லிக்காய் லேகியத்தை 3 வயதிலிருந்து 12 வயது வரை 5 கிராம் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 10 கிராம் இருவேளை ஆகாரத்திற்கு பிறகு சாப்பிட கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.