வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்

கொரோனா பரிசோதனை சான்றிதழை கொண்டு வந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப் படுவார்கள் என்று சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-27 18:46 GMT
சிவகங்கை, 
கொரோனா பரிசோதனை சான்றிதழை கொண்டு வந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப் படுவார்கள் என்று சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை
சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு வருகிற 2-ந்தேதி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது பணியில் உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
தடை
ஒவ்வொருவரும் வாக்கு எண்ணும் வளாகத்திற்கு வரும்போது முகக்கவசம் அணிந்து வரவேண்டும். வாக்கு எண்ணும் வளாகத்திற்கு வரக்கூடிய வேட்பாளர்கள், முகவர்கள் கைபேசி எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரக்கூடிய அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த பரிேசாதனையை எந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஐ.சி.எம்.ஆர். நிறுவனங்களிலும் அவர்களின் வசதிக்கேற்ப பரிசோதனையை மேற்கொள் ளலாம். 
மேலும் பொது சுகாதாரத்துறையின் மூலம் பரிசோத னைக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், முகவர்கள் கொரோனா தடுப்பூசி குறைந்தது ஒரு முறை போட்டவர்கள் உரிய பதிவுகளை காண்பித்து செல்லலாம். 
ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் உள்ளேயும், வெளியேயும் ஒரு தூய்மைப்பணியாளர் மூலம் கிருமிநாசினி மருந்துகள் வழங்குவதுடன் கை கழுவுவதற்கான சோப்பு மற்றும் தண்ணீர் தயார்நிலையில் வைக்கப்படும். 
சமூக இடைவெளி
வாக்கு எண்ணிக்கை மையங்கள் முழுவதும் நன்கு காற்றோட்டமாக இருக்கும் வகையில் தேவையான மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளது. முகவர்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் பணியாளர்களும் முகக்கவசம் அணிந்து பணிகளை மேற்கொள்வதுடன் பணிகள் முடியும் வரை பொது சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி சுகாதாரத்துடன் பாதுகாப்பாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்