ரூ.53 லட்சம் கள்ளநோட்டுகளுடன் கேரள இளம்பெண் கைது

அருமனை அருகே ரூ.53 லட்சம் கள்ள நோட்டுகளுடன் கேரள இளம்பெண் கைது செய்யப்பட்டார். இந்த கள்ளநோட்டு விவகாரத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் சந்தோசுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Update: 2021-04-27 17:34 GMT
அருமனை, 
அருமனை அருகே ரூ.53 லட்சம் கள்ள நோட்டுகளுடன் கேரள இளம்பெண் கைது செய்யப்பட்டார். இந்த கள்ளநோட்டு விவகாரத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் சந்தோசுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கேரள இளம்பெண்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரிக்கம் பகுதியை சேர்ந்தவர் சிந்து (வயது 34). தற்போது இவர், களியக்காவிளை அருகே கோட்டவிளாகம் அனுபநகர் பகுதியில் வசித்து வருகிறார். அங்கு நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார்.
கடந்த 15 நாட்களுக்கு முன் சிந்து, குமரி மாவட்டம் அருமனை அருகே வெள்ளாங்கோடு பகுதியில் உள்ள தனியார் முந்திரி ஆலைக்கு வந்தார். அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களிடம் தான், நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், கடன் தருவதாகவும் கூறி சென்றார். அப்போது முந்திரி ஆலை தொழிலாளர்கள் சிலர், சிந்துவிடம் கடன் கேட்டதாக தெரிகிறது.
சுற்றி வளைத்து பிடித்தனர்
இதைதொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சிந்து, ஒரு காரில் 3 இரும்பு பெட்டிகளில் கட்டுக் கட்டாக பணம் எடுத்துக் கொண்டு முந்திரி ஆலைக்கு வருவதாக தக்கலை போலீசாருக்கு கிடைத்தது. உடனே போலீசார் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர். சிந்துவை பற்றி விசாரணை நடத்தியதில் அவரது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
உடனே தக்கலை தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையில் அருமனை போலீசார் முந்திரி ஆலையை சுற்றி வளைத்தனர். சிந்து இரவு நேரத்தில் காரில் பண பெட்டியுடன் முந்திரி ஆலைக்குள் நுழைந்தார். அவர் சற்றும் எதிர்பாராத நிலையில் அங்கு ஏற்கனவே பதுங்கி இருந்த போலீசார் சிந்துவை சுற்றி வளைத்தனர்.
அதிர்ச்சி அடைந்த போலீசார்
அவரது காரில் இருந்த 3 பெட்டிகளையும் திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 3 பெட்டிகளிலும் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. அந்த ரூபாய் நோட்டுகளை சோதனை செய்த போது அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.53 லட்சம் என கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்து சிந்துவை அருமனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு தக்கலை துணை ேபாலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் சிந்துவிடம் விசாரணை நடத்தினர்.
திரைப்பட இயக்குனருக்கு தொடர்பு?
முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த சிந்து, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரனின் கிடுக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
தனது சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரிக்கமாக இருந்தாலும், களியக்காவிளை பகுதியில் தங்கியிருந்து நிதி நிறுவனம் நடத்தி வருவதாக சிந்து கூறினார். மேலும் தன்னிடம் இருந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் சினிமாவில் பயன்படுத்தக்கூடிய ரூபாய் நோட்டுகள் எனவும், கேரளாவை சேர்ந்த திரைப்பட இயக்குனர் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமானது எனவும், அவரிடம் இருந்துதான் இதனை வாங்கி வந்ததாகவும் சிந்து கூறியுள்ளார்.
பலரிடம் மோசடி
மேலும் பலரிடம் இருந்து கடன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. நெய்யூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தொழில் செய்வதற்காக ரூ.7 கோடி கடன் வேண்டி சிந்துவை அணுகியதாகவும், அதற்கு சிந்து ரூ.7 லட்சம் தந்தால் கடன் ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார். அந்த நபர், ரூ.7 லட்சத்தை கொடுத்துள்ளார். அதனை வாங்கிய சிந்து அதன்பிறகு தலைமறைவானதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதேபோல் மாலைக்கோடு, இடைக்கோடு, பளுகல் உள்ளிட்ட பகுதியில் ஏராளமானவர்களிடம் கடன் வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்து செய்து இருப்பதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. தொடர்ந்து சிந்து மீது அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இயக்குனரிடம் விசாரணை நடத்த முடிவு
இருப்பினும சிந்து அளித்துள்ள வாக்குமூலத்தில் கள்ளநோட்டுகள் திரைப்பட இயக்குனர் சந்தோசுக்கு சொந்தமானதுதான் என்று கூறி இருப்பதால், திரைப்பட இயக்குனர் சந்தோஷிடம் விசாரணை நடத்த அருமனை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அவரிடம் விசாரணை நடத்திய பிறகுதான், சிந்து எதற்காக இவ்வளவு பணத்தை இங்கு கொண்டு வந்தார். ஏதேனும் கள்ள நோட்டு மாற்றும் கும்பலுக்கும், சிந்துவுக்கும் தொடர்பு உண்டா? என்பது உள்ளிட்ட முழு விவரம் தெரிய வரும் என்று போலீசார் கூறினர். இயக்குனர் சந்தோஷிடம் விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகளுடன் கேரள பெண் குமரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்