சூறைக்காற்றுடன் பலத்த மழை
வேதாரண்யத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழையால் அகஸ்தியன்பள்ளியில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழையால் அகஸ்தியன்பள்ளியில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
பலத்த மழை
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கம் இரவிலும் நீடித்தது. வெயில் சுட்டெரிப்பதால் பகலில் மக்கள் வெளியே வராமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் வேதாரண்யத்தில் நேற்று அதிகாலையில் இருந்து குளிர்ந்த காற்று வீசியது. இதை தொடர்ந்து காலை 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
உப்பு உற்பத்தி பாதிப்பு
இடி, மின்னலுடன் பெய்த இந்த மழை 1½ மணி நேரம் நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
மழை காரணமாக வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் 3,000 ஏக்கரில் நடைபெற்ற உப்பு உற்பத்தி ஒரு பகுதி பாதிக்கப்பட்டது. கடுமையான வெயிலின் காரணமாக தீவிரமாக நடைபெற்று வந்த உப்பு உற்பத்தி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உப்பள தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வீடு திரும்பினர். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க குறைந்தபட்சம் 5 நாட்களாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். மேலும் தங்கள் சேமித்து வைத்திருந்த உப்பை பிளாஸ்டிக் தார்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர்.
இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருமருகல்
அதேபோல திருமருகல் ஒன்றிய பகுதிகளில் நேற்று மதியம் 1 மணிநேரம் பரவலாக மழை பெய்தது.இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்களில் நேரடி நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் இளம் சம்பா நெற்பயிர்களுக்கு, பருத்திக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கீழ்வேளூர்
கீழ்வேளூர், ஆழியூர், நீலப்பாடி, குருக்கத்தி, அத்திப்புலியூர், தேவூர், இருக்கை, வெண்மணி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் கீழ்வேளூரில் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வலிவலம் இருதய கமலநாதசுவாமி கோவிலில் இருந்த இரண்டு தென்னை மரங்களில் மின்னல் தாக்கியது. இதில் தென்னை மரத்தில் குருத்து, மட்டைகள் சரிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தென்னை மரத்தின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.