சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்

சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்

Update: 2021-04-27 15:42 GMT
கோவை

சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு சங்கங்கள் சார்பில் கோவை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 

அதன்படி, நேற்று முன்தினம் முதல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சலூன் கடைகளும் மூடப்பட்டன. இதனால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. 

எனவே சலூன் கடைகளை திறக்க வேண்டும் என்று கோரி நேற்று முன்தினம் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றும் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்துவோர் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சசிக்குமார், செயலாளர் கே.வி.உதயகுமார், பொருளாளர் மகேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர். 
அவர்கள் கலெக்டர் நாகராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

அதில், கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு சலூன் கடைகளை அடைக்க உத்தரவிட்டு உள்ளது. இதனால் முடிதிருத்தும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

கடைகளை திறக்க வேண்டும்

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக சலூன் கடைகள் அடைக்கப் பட்டதால் 6 மாதங்கள் முடிதிருத்தும் தொழிலாளர்களின் குடும்பங்கள்  வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் அவதிப்பட்டது.

எனவே கொரோனா நோய்தொற்று பரவாத வண்ணம் அரசு அறிவித்து உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்போடு பணி செய்வோம். எனவே காலை 6 மணிமுதல் மதியம் 1 மணிவரை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவை மாவட்ட மருத்துவர் சமூக முன்னேற்ற பொது நலச்சங்க தலைவர் நாச்சிமுத்து, பொதுச் செயலாளர் கே.எஸ்.மணியன், மாவட்ட பொருளாளர் ஜெயபால் உள்ளிட்டோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்