கோவில்பட்டியில் கொரோனாவுக்கு ஆசிரியர் பலி

கோவில்பட்டியில் கொரோனாவுக்கு ஆசிரியர் பலியானார்.

Update: 2021-04-27 15:25 GMT
கோவில்பட்டி,:
கோவில்பட்டியில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருடன் ேசர்த்து கோவில்பட்டி பகுதியில் கொரோனா தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா 2வது அலை
கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் கொரோனா தொற்று 2வது அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஏராளமானோர் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வகையில் கோவில்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் மேல் நிலை பள்ளியில் 54 வயதுடைய முதுகலை கணித ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 
ஆசிரியர் சாவு
இதையடுத்து அவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு அணுகி உள்ளார். ஆனால், தனியார் மருத்துவ மனைகளில் படுக்கைகள் நிரம்பி விட்டதால், நேற்று முன்தினம் அவர் தனது சொந்த ஊரான தூத்துக்குடி சென்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இந்நிலையில், நேற்று காலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அடக்கம் செய்யப்பட்டது. 
321 பேருக்கு சிகிச்சை
இதனால் கோவில்பட்டியில் கடந்த 5 நாட்களில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. தற்போது அரசு மருத்துவமனையில் 65 ஆண்கள், 79 பெண்கள், ஒரு பெண் குழந்தை என மொத்தம் 145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதே போல், கோவிட் கேர் சென்டரில் 176 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள படுக்கைகள் நிரம்பி விட்டதால், மற்றொரு கல்லூரியில் கோவிட் கேர் சென்டர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், 236 படுக்கைகளுடன் இன்று (புதன்கிழமை) முதல் செயல் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்