வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
ஊட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் முகவர்களுக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்று கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
ஊட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் முகவர்களுக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்று கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
முன்னேற்பாடு பணிகள்
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. அதன்பின்னர் ஊட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு, 3 அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு மத்திய பாதுகாப்பு படையினர், மாநில போலீசார் உள்பட 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
மொத்தம் 102 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணும் அறைகளில் வரிசையாக மேஜைகள் போடப்பட்டு, கம்பி வலைகள் பொருத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
‘நெகட்டிவ்’ சான்று
நீலகிரியில் 3 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், முகவர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பரிசோதனை மேற்கொண்டு பாதிப்பு இல்லை என சான்று கொண்டு சென்றால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஊட்டி உள்பட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 3 அறைகளில் நடக்கிறது. தபால் வாக்குகள் தனி அறையில் எண்ணப்படுகிது. வாக்கு எண்ணும் பணியில் 451 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.
பரிசோதனை முகாம்
கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு இருப்பதால், நாளை (புதன்கிழமை) தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடக்கிறது. தொடர்ந்து 29-ந் தேதி வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு, 30-ந் தேதி போலீசாருக்கு என 3 நாட்கள் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து முகவர்கள், அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று கொரோனா பாதிப்பு இல்லை (நெகட்டிவ்) என்ற சான்றை கட்டாயம் எடுத்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.