மதம் பிடித்த கும்கி யானை முதுமலைக்கு திரும்பியது

தேவாலாவில் காட்டுயானைகளை விரட்டும் பணிக்கு வந்து, மதம் பிடித்த கும்கி யானை முதுமலைக்கு திரும்பியது. முன்னதாக அது லாரியில் ஏற மறுத்து மரத்தை முட்டி தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-27 03:01 GMT
கூடலூர்,

தேவாலாவில் காட்டுயானைகளை விரட்டும் பணிக்கு வந்து, மதம் பிடித்த கும்கி யானை முதுமலைக்கு திரும்பியது. முன்னதாக அது லாரியில் ஏற மறுத்து மரத்தை முட்டி தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதம் பிடித்தது

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவாலா பகுதியில் ஊருக்குள் புகுந்து 2 காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வந்தன. இந்த காட்டுயானைகளை விரட்ட முதுமலையில் இருந்து உதயன், ஜான், வில்சன் ஆகிய 3 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன. தொடர்ந்து ஊருக்குள் நுழைய முயலும் காட்டுயானைகள் விரட்டியடிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில் வில்சன் என்ற கும்கி யானைக்கு திடீரென மதம் பிடித்தது. மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டதுடன், பாகன்களை தாக்க முயன்றது. பின்னர் இரும்பு சங்கிலியால் மரத்தில் கும்கி யானையை வனத்துறையினர் கட்டினர். எனினும் கட்டுப்படாமல் அருகில் இருந்த தேயிலை செடிகள் மற்றும் மரங்களை வேருடன் பிடுங்கி எறிந்து வந்தது.

மரத்தை முட்டி தள்ளியது

இதன் காரணமாக அந்த கும்கி யானையை முதுமலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை 10 மணிக்கு வனச்சரகர்கள் கணேசன், கலைவேந்தன், புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் மற்றும் பாகன்கள் நேரில் வந்து, முதுமலைக்கு கொண்டு செல்ல அந்த கும்கி யானையை லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். 

ஆனால் லாரியில் ஏற மறுத்த கும்கி யானை, அங்கிருந்த மரத்தை முட்டி தள்ளியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கரும்பு துண்டுகளை வழங்கி கும்கி யானையை பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு லாரியில் ஏற்றினர். தொடர்ந்து முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மற்றொரு கும்கிக்கு அறிகுறிகள்

இதுமட்டுமின்றி உதயன் என்ற மற்றொரு கும்கி யானைக்கு மதம் பிடிக்கும் அறிகுறிகள் தென்படுவதாகவும், அதையும் முதுமலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்