அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு
அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஊட்டி தலைமை தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலாளி ஒருவர் வெளி மாவட்டத்துக்கு சென்று திரும்பினார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று உறுதியானது.
ஊட்டி ஆயுத படையில் 2 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக நேற்று ஊட்டி தலைமை தபால் நிலையம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நகராட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடையணிந்தும், பிரத்யேக முககவசம் அணிந்தும் கிருமிநாசினி தெளித்தனர். இதேபோல் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அலுவலக பிரிவுகள், வெளிப்புறம், வளாகத்தில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.