ஈரோட்டில் 7 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம்- கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார்
ஈரோட்டில் 7 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனத்தை கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார்.
ஈரோடு,
ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகத்துடன் மாநகராட்சி இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி நேற்று நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனத்தை கலெக்டர் சி.கதிரவன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
ஈரோடு மாநகர் பகுதியில் 10 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது மாநகர் பகுதியில் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால் தற்போது நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
672 பேருக்கு கொரோனா
மாநகர் பகுதியில் தற்போது 672 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இதில் 90 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் குறித்து சுகாதார துறையினர் தினமும் பட்டியல் வெளியிட்டு வருகின்றனர்.
இதில் மாநகர் பகுதியில் எந்த இடங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறதோ? அந்த இடங்களுக்கு இந்த நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள் செல்லும். அந்த பகுதி மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து, சாதாரண காய்ச்சல் என்றால் அதற்கு மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்படும்.
உடல் பரிசோதனை
மேலும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும். முடிவு வரும் வரை அந்த நபர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். முடிவில் தொற்று ஏற்பட்டால் அந்த நபர் ஸ்கிரீனிங் சென்டருக்கு அழைத்து செல்லப்படுவார். அதில் முழு உடல் பரிசோதனை செய்து அவர் வீட்டில் இருந்து சிகிச்சை பெறலாமா அல்லது மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறலாமா என்று முடிவு செய்யப்படும்.
45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆதார் கார்டை காண்பித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தனியார் பங்களிப்புடன் 3 வாகனங்களும், 4 அரசு வாகனங்களும் என 7 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனத்தில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.