சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கில்தடையை மீறி சுற்றிய 380 பேர் மீது வழக்கு-100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது தடையை மீறி ஊர் சுற்றிய 380 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-04-26 23:39 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது தடையை மீறி ஊர் சுற்றிய 380 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் கண்காணிப்பு
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அன்றைய தினம் ஆஸ்பத்திரிகள், பாலகங்கள், மருந்து கடைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
380 பேர் மீது வழக்கு
முழு ஊரடங்கையொட்டி மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அத்தியாவசிய தேவையின்றி மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி சாலைகளில் உலா வந்த நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதுடன் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மாநகரில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதாக 134 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் புறநகரில் 246 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் மொத்தம் 380 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முககவசம்
இதனிடையே மாநகரில் மட்டும் இதுவரை முககவசம் அணியாமல் சென்ற 20 ஆயிரத்து 824 பேர் மீதும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாத 236 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்