சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தேவையை கண்காணிக்க தனிக்குழு-டீன் முருகேசன் தகவல்

ஆக்சிஜன் தேவையை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என ஆஸ்பத்திரி டீன் முருகேசன் தெரிவித்தார்.

Update: 2021-04-26 23:39 GMT
சேலம்:
ஆக்சிஜன் தேவையை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என ஆஸ்பத்திரி டீன் முருகேசன் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் 3,400-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிக்கிறது.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் போதுமான அளவு உள்ளதாக டீன் முருகேசன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 650 படுக்கைகள் உள்ளன. கூடுதலாக 300 படுக்கைகள் அமைக்க முடிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசு ஆஸ்பத்திரியில் 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் திரவ தொட்டி உள்ளது. 550 படுக்கைகளுக்கு நேரடியாக ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் தொட்டியில் எப்போதும் 70 சதவீதம் இருப்பு இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் சென்சார் கருவி பொருத்தப்பட்டு இருப்பதால் 40 சதவீதத்துக்கு கீழ் குறைந்தால் தொட்டியில் ஆக்சிஜன் நிரப்புபவர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும்.
தனிக்குழு அமைப்பு
ஆக்சிஜன் தேவையை கண்காணிக்க மயக்கவியல் நிபுணர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 300 சிலிண்டர்களும் வைத்துள்ளோம். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு வருவதற்கு வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்