கடலூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக 241 பேருக்கு கொரோனா தொழிலாளி பலி
கடலூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக 241 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொழிலாளி ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
கடலூர்,
241 பேருக்கு தொற்று
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 28 ஆயிரத்து 932 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 315 பேர் பலியான நிலையில், 27 ஆயிரத்து 104 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 241 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது ஆந்திரா, பெங்களூரு, டெல்லி, மராட்டியம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்தும், சென்னை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கடலூர் வந்த 38 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 2 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 76 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 125 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.
விருத்தாசலம் தொழிலாளி பலி
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 180 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.இதுதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1075 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளிலும், 498 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளி ஒருவர் நேற்று பலியாகியுள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
விருத்தாசலத்தை சேர்ந்தவர் 58 வயது தொழிலாளி. இவர் கொரோனா அறிகுறிகளுடன் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது.