4 பேர் சிக்கினர்; 22 பவுன் பறிமுதல்

மதுரையில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர் களிடமிருந்து 22 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2021-04-26 20:14 GMT
மதுரை
மதுரையில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர் களிடமிருந்து 22 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர் சங்கிலி பறிப்பு
மதுரை மாநகரில் கடந்த சில நாட்களாக நகை மற்றும் செல்போன் பறிப்பு, திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மதுரை மாநகர தீவிர குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் போலீசார் மாட்டுத்தாவணி, திருப்பாலை பகுதியில் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்த போது 22 பவுன் நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
4 பேர் சிக்கினர்
பின்னர் போலீசார் அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் சிவகங்கை மாவட்டம் லாடனேந்தல் பகுதியை சேர்ந்த கார்த்திக்(வயது 22), ராஜசேகர் (20), மதுரை கடச்சனேந்தல் முருகானந்தம்(21), திருப்பாலை சித்திக்அலி (43) என்பதும், இவர்கள் மீது மதுரை நகர், புறநகர், சிவகங்கை மாவட்டங்களில் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 22 பவுன் தங்க சங்கிலி, மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் 4 பேரும் தல்லாகுளம், சிலையனேரி, பார்க்டவுன் நகர், விளங்குடி ஆகிய பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் 4 பேரையும் தேனி மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைத்தனர். இவர்களை பிடித்த போலீசாரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

மேலும் செய்திகள்