மோகனூர் அருகே, சாலைப்பணிக்காக அனுமதியின்றி ஏரியில் மண் வெட்டி எடுப்பு டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு
மோகனூர் அருகே சாலைப்பணிக்காக அனுமதியின்றி ஏரியில் மண் வெட்டி எடுக்கப்பட்டதை அறிந்த தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மோகனுார்:
மோகனூர் அருகே சாலைப்பணிக்காக அனுமதியின்றி ஏரியில் மண் வெட்டி எடுக்கப்பட்டதை அறிந்த தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏரியில் மண் வெட்டி எடுப்பு
மோகனூர் ஒன்றியம், பெரமாண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, நொச்சிப்பட்டியில், 10 ஏக்கர் பரப்பளவில், ஏரி உள்ளது. இங்கு அதிக அளவில் மண் உள்ளது.
பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் மூலம், வள்ளிபுரத்தில் இருந்து பாலப்பட்டி செல்லும் சாலையில், குட்லாம்பாறையில் இருந்து அய்யம்பாளையம், நொச்சிப்பட்டி, வழியாக 4¾ கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.2.42 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.
அதற்காக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அரசின் அனுமதியின்றி, டிப்பர் லாரியில், ஏரியில் இருந்து மண்ணை வெட்டி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த பெரமாண்டம்பாளையம் ஊராட்சி தலைவர் காந்தாமணி சம்பவ இடத்துக்கு சென்று தடுத்துள்ளார்.
சிறைபிடிப்பு
இந்நிலையில், மீண்டும் நேற்று காலை டிப்பர் லாரியில் பொக்லைன் எந்திரம் மூலம், மண் வெட்டி எடுத்து லோடு ஏற்றுவதாக ஊராட்சி தலைவர் காந்தாமணிக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற அவர் அதை தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது மண் அள்ளியவர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர் காந்தாமணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்கள், பொக்லைன் எந்திரம் மற்றும் டிப்பர் லாரியை சிறை பிடித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மோகனூர் தாசில்தார் பாஸ்கர் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு வந்து விசாரித்தனர். மேலும் அங்கு வந்த மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா மற்றும் போலீசார் சிறை பிடித்த வாகனத்தை மீட்டு, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே போலீஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து அங்கு அ.தி.மு.க.வினர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட வாகனங்கள் மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.