கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; போலீஸ்காரர் படுகாயம்
மானூர் அருகே காரும், மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.
மானூர். ஏப்:
மானூர் அருகே உள்ள கம்மாளங்குளத்தைச் சார்ந்தவர் பால்ராஜ் மகன் சுரேஷ்குமார் (வயது 30). இவர் சீதபற்பநல்லூர் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். தனது சொந்த ஊரான கம்மாளங்குளத்திற்கு வந்தவர், அருகிலுள்ள ராமையன்பட்டியில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க தனது மோட்டார்சைக்கிளில் சென்றார்.
நெல்லை- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக பின்னால் வந்த கார், அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட போலீஸ்காரர் சுரேஷ்குமார் பலத்த காயம் அடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், காரை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் பீட்டர் (20) என்பவர் மீது மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.